10/08/2011

VAYALUR MURUGAN (வயலூர் முருகன் கோவில்)

                                       வயலூர் முருகன் வரலாறு

                      முருக பெருமான் தன் குடும்பத்தோடு இருக்கும் ஒரே தளம்.
"கேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும்"

பங்குனி உத்திரம்  வயலூர் முருகன்  கோவில்க்கு சிறப்பானது .

வாய் மணக்க பாடும் திருப்புகழ் என்னும் அரிய நூல் உருவாகக் காரணமான வயலூர் முருகனை பங்குனி உத்திரத்தை ஒட்டி தரிசித்து வருவோமா!தல வரலாறு: சோழ மன்னன் ஒருவன் வயல்வெளிக்குச் சென்ற போது, ஒரே கணுவில் மூன்று கரும்புகள் விளைந்திருந்ததைக் கண்டான். அதன் அடியில் தோண்டியபோது சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டான். 

அந்த இடத்தில் கோயில் எழுப்பினான். சிவனுக்கு ஆதிநாதர் என்ற பெயர் சூட்டி, அம்பாள் ஆதிநாயகிக்கும் சன்னதி எழுப்பினான். வயல்கள் நிறைந்த அவ்வூருக்கு 'வயலூர்' என்று பெயர் ஏற்பட்டது.திருப்புகழ் தந்த திருமுருகன்: திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார், 'முத்தைத் தரு' எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின், அவர் வேறு பாடல் எதுவும் பாடவில்லை. ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி, 'வயலூருக்கு வா!' என்றது. 

அருணகிரியார் இங்கு வந்தார். அங்கு முருகனின் நேரடி தரிசனம் கிடைக்குமென நினைத்து வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முருகன் வரவில்லை. உடனே 'அசரீரி பொய்யோ?' என உரக்கக் கத்தினார். அப்போது, முருகன் அங்கு தோன்றி வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் 'ஓம்' என்று எழுதினார். அதன்பின், இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடினார். தொடர்ந்து பல முருகன் கோயில்களுக்குச் சென்று திருப்புகழ் பாடினார்.

பங்குனி உத்திர திருமணம்: சிவன் சன்னதிக்குப் பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட நல்ல வரன் அமையும். கந்த சஷ்டியின்போது முருகன்- தெய்வானை, பங்குனி உத்திர திருவிழாவில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின்போது, முருகனுக்கு வேடன் மற்றும் முதியவர் அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப் படுவது போல பாவனையாகச் செய்வர்.

வாரியார் திருப்பணி: 1934ல், வாரியார் சுவாமி இக்கோயிலுக்கு வந்தார். அப்போது அர்ச்சகராக இருந்த ஜம்புநாத சிவாச்சாரியார், அவருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார். மகிழ்ந்த வாரியார், ஐம்பது பைசாவை அவரிடம் காணிக்கையாகக் கொடுத்தார். அன்றிரவில் கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் தோன்றிய முருகன், 'ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயே? அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா?' என்று கேட்டார். வியந்த நிர்வாகி, மறுநாள் கோயிலுக்கு வந்தபோது, வாரியார் ஐம்பது காசு கொடுத்ததை அறிந்தார். அவருக்கு அந்த காசை திருப்பி அனுப்பி விட்டார். நடந்ததை அறிந்த வாரியார், கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார்.

சதுர தாண்டவ நடராஜர்: பாதம் தூக்கி நடனமாடும் நடராஜரை மட்டுமே நீங்கள் பார்த்திருப்பீர்கள். இங்கோ, காலைத் தூக்காமலேயே உள்ள நடராஜரைக் காணலாம். இவரது ஜடாமுடி முடியப்பட்ட நிலையில் இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவருக்கு 'சதுரதாண்டவ நடராஜர்' என்று பெயர். மார்கழி திருவாதிரைத் திருநாள் இவருக்கு விசேஷமாக நடக்கும்.விசேஷ விநாயகர்: அருணகிரிநாதருக்கு காட்சி தந்த 'பொய்யா கணபதி விசேஷமான மூர்த்தியாவார். அருணகிரியார் இவரைப்போற்றி திருப்புகழில் காப்புச்செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ, அந்த அளவிற்கு இவர் செல்வத்தைத் தருவார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அருணகிரிநாதருக்கும் சன்னதி உள்ளது. 

ஆனி மூலத் தன்று இவர் முருகனுடன் புறப்பாடாவார். சிவனுக்குரிய வன்னி மரம் இத்தலத்தின் விருட்சம். கோயிலுக்கு வெளியே சக்தி தீர்த்தம் உள்ளது.திருவிழா: வைகாசியில் பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம். சித்திரை பிறப்பு,இருப்பிடம்: திருச்சியில் இருந்து 11 கி.மீ., தூரத்தில் வயலூர் உள்ளது

குறிப்பு:
                பக்தர்கள் யாரேனும் வேறு முருகன் கோவில்க்கு வேண்டிய  நேர்த்திகடனை வயலூர் முருகன்  கோவில்லில் செலுத்தலாம் ஆனால் வயலூர் முருகன்  கோவில்க்கு வேண்டிய  நேர்த்திகடனை வேறு எங்கும் செலுத்த கூடாது .

பேருந்து வழிதடம்: 
                                       சத்திரம் பேருந்து நிலையம் TO வயலூர்
                                     பேருந்து எண்:46 , 46K,29 ,SR ,LRS ,T1 ,NTS .